மானசி ஜோஷி: BBC Indian Sportswoman of the year விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்

ஒரு சனிக்கிழமை பிற்பகல் நேரம், ஹைதராபாத்தில் மானசி கிரிஷ்சந்திரா ஜோஷியை அவருடைய இல்லத்தில் நாங்கள் சந்தித்தோம். தான் தங்கியுள்ள அடுக்குமாடி வீட்டை வேறு இருவருடன் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.


செல்போனில் ஒரு திரைப்படம் பார்த்தபடியே மானசி மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மன்னிப்பு கேட்டுக் கொண்டு செயற்கைக் காலை பொருத்திக் கொண்டார். வாரம் முழுக்க கடுமையான பயிற்சி முடித்த பிறகு சனிக்கிழமை மதியம் தான் தன்னுடைய ஓய்வு நேரம் தொடங்குகிறது என்று அவர் கூறினார்.


நான் தினமும் 7 முதல் 8 மணி நேரம் வரை பயிற்சி எடுக்கிறேன். பிற்பகலில் ஓய்வு எடுத்துக் கொண்டு, உடலுக்குத் தேவையான ஓய்வைத் தருகிறேன். மீண்டும் மாலையில் பயிற்சி செய்வதற்காக மதியத்தில் ஓய்வு தருகிறேன். சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் மட்டுமே நான் பயிற்சி செய்கிறேன். ஆகவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தகம் படிப்பது அல்லது தோட்டத்தை பராமரிப்பது போன்றவற்றை மேற்கொள்கிறேன்'' என்று மானசி தெரிவித்தார்.



எங்களுக்கு இஞ்சி டீ போட்டுத்தர மானசி முன்வந்தார். சமையலறையில் கொஞ்சம் தண்ணீர் கொட்டிக் கிடந்தது. துணி போட்டு தரையை சுத்தம் செய்த அவர், ``இது எனக்கு ஆபத்தானது'' என்று கூறினார். அவர் தயாரித்த இஞ்சி டீயுடன் நாங்கள் உரையாடலைத் தொடங்கினோம்.